திங்கள், 29 ஜூலை, 2013

மூழ்கிப்போதலும், வெளியேறுதலும்.......



ஏதேனும் ஒன்றில் மூழ்கி போய் வெளியே வர திணறும் நாட்களை கடக்காதவர்கள் என ஒருவருமே இல்லை எனலாம். அந்த ஏதோ ஒன்று, நட்பாகவோ, பழக்கமாகவோ, ஏன்........ பேஸ்புக் காக கூட இருக்கலாம். எனது அறிவுக்கு எட்டிய இது பற்றிய மிக சிறிய அலசல்.

நாம் கரைந்து போவதற்கென்று எத்தனையோ செயல்கள் இருந்தாலும், அந்த 'ஏதோ ஒன்று', மிச்சம் இருக்கும் இடைவெளியை நிரப்புவதோடு அல்லாமல் அதன் எல்லையை நீட்டித்துக்கொண்டே செல்கிற பொழுது, நம் இயல்பு வாழ்க்கையை சிக்கலாக்கி விடுகிறது.

முன்னறிவிப்பின்றி வந்து நிற்கும் அந்த 'ஒன்றுடன்' பயணிக்கும் நேரமானது, ஒரு நாளின் வெறும் ஒரு மணி நேரமாக இருக்கலாம். அதே அளவிலான நேரம் தினந்தோறும் தொடரவும் செய்யலாம். மீதி இருபத்து மூன்று மணி நேரங்களும் அந்த ஒரு மணி நேரத்தைப் பற்றியே சிந்திப்பதற்கும், சிலாகிப்பதற்கும் மட்டுமே என்று மாறிக் கொண்டே வரும் மோசமான நிலையில், பிரச்சனை வேர் ஊன்ற தொடங்கி விட்டது என உறுதியாக நம்பலாம். சமயங்களில், இந்த ஒன்றை விட, பல மடங்கு உபயோகம் தரும் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், அந்த ஒரு மணி நேரமே பெரும் பிரியத்திற்கு ஒன்றாக மாறிப் போய் நிற்பதையும், அதற்கென நேரம் ஒதுக்க முடியாமல் தடுதல் செய்ததாக நினைத்த சகலத்தையும் திட்டுத் தீர்ப்பதை, இந்த பிரச்சனையின் உச்சம் எனலாம்.

வண்டி சீராக போகும் வரை, எல்லாம் சுகமயம்.

இந்தப்பயணத்தில், விரைவாகவோ அல்லது மிக விரைவாகவோ சரி செய்ய முயன்று தோற்றுப் போகும் பிரச்சனைகள் நம்மை நிலை தடுமாற வைக்கும். முரண் ஏற்படும் நேரங்களில் வெளியேற எத்தனிக்கையில் சந்திக்கிற வலி, அடுத்த வேறு ஏதேனும் ஒன்றுடன் சிக்கிக் கொள்வது வரை தொடரலாம். :)

வயது கூடியவர்களுக்கும், அனுபவசாலிகளுக்கும், ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வதற்கு என்று, ஒரு உதாரணம் முன்னமே இருக்கலாம். பொதுவாக ஒப்பீட்டில், சோகமாக இருக்கும் பொழுது கடந்தே சிறந்தது என்றும், மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது கடந்து கொண்டிருப்பதே சிறந்தது என்றும் தோன்றலாம். :)

சற்று உற்று நோக்கினால்.......... மிகச்சரியானவை என்று எதுவுமே இல்லை, என்று தெரிய வரலாம்.

முயற்சிகள் தோல்வியடைந்து சரியாக கையாள தெரியாமல் உடனடியாக வெளியேறியே ஆக வேண்டுமென்றால், இனி வருவது, எத்தகைய பெரிய லாபமாக இருந்தாலும்  தேவையேயில்லை என்று, இது வரை பட்ட கஷ்ட, நஷ்டத்துடன் போதும் என்று விடை கொடுப்பதே, சிறந்த நிவாரணம் என தோன்றுகிறது.


நேரத்தை கடத்த ஏதேதோ போர்வையில் நம்மை இழுத்துப் போட்டுக் கொள்ள வரும் கரங்களை, தகுதிப்படுத்தியே உள் நுழைய அனுமதிக்கிறோம். பலவற்றை ஆரம்பகட்டத்திலேயும்,  மிக சிலவற்றை, பாதியிலேயும் ஒதுக்கித் தள்ள முடிகிறது. தேர்ந்தெடுத்த அந்த ஒன்றிரண்டின் மீதும் முட்டிக் கொண்டு வெளியேறுகையில் .............. நம் சுயத்திற்கு உரிய மரியாதையை கொடுக்கிற நிம்மதி ஏற்படுகிறது.
( நாமே நம்மளை மதிக்காட்டி, வேற யாரு மதிப்பா?  :)  )

ஒரே ஒரு முறை தான் வாழ்க்கை. இருக்கும் வரை எதற்கும் கட்டுப்படாமல் இருக்கும், சுதந்திர உணர்வே சுய அடையாளமாக இருக்க வேண்டும் என்பதே என்னின் ஆகப் பெரும் விருப்பம். அதற்கான பயணத்தின் முயற்சியில் இருக்கிறேன்...









வெள்ளி, 19 ஜூலை, 2013

கொஞ்சம் ஒரு ஈரானியப்படமும்... கொஞ்சம் நாங்க விளையாடின ஹாக்கியும்...


பெண்கள் மைதானத்திற்கு சென்று கால்பந்து போட்டிகளைக் காண்பது குற்றம் என்ற நாட்டில், சில பெண்கள் போட்டியைக் காண முயற்சித்து, பிடிபட்ட பிறகும் என்ன செய்கின்றனர் என்பதே ஜாஃபர் பனாஹி யின்,  ஆஃப் சைட் ( Off Side) என்ற ஈரானியப் படத்தின் கதை.

படத்தின் ஆரம்பத்திலேயே விளையாட்டு ரசிகர்களால் களைகட்டியுள்ள மைதானம், நம் கிரிக்கெட் போட்டிகளின் பொழுது காணும் காட்சிகளை ஞாபகப்படுத்துகிறது. ஆண்கள் போல வேடமிட்டிருந்தும், ஒவ்வொரு பெண்ணாக , மாட்டிக்கொள்ள, போட்டியைக் காண முடியாதவாறு, மைதானத்தின் மேற்பகுதியில் இந்தப் பெண்களை குற்றவாளிகளைப் போல நிற்க வைக்கின்றனர் காவலர்கள்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதியை நிர்ணயிக்கும் போட்டி என்பதால் தீவிர ஆர்வத்துடன் நேரில் பார்க்க வந்தப் பெண்கள், போட்டி ஆரம்பித்ததும், வர்ணனை செய்யும்படி, காவலர்களிடம் கேட்க, தெரிகின்ற இடைவெளி வழியே பார்த்து சொல்லுகின்ற காவலரை, லோக்கல் ஆட்களை ப்ரமோட் செய்ற வேலை எல்லாம் வேணாம், உள்ளது உள்ளபடி சொல்லு', என்று மிரட்டுவதாகட்டும், அடைபட்டு இருக்கும் சிறிய தடுப்புக் கம்பிக்கு உள்ளே ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்வதாகட்டும், விளையாட்டின் போக்கிற்கு ஏற்ப மாறும் முகங்கள் ஆகட்டும் , போட்டி முடிவதற்கு முன்பே வண்டியில் அழைத்து செல்கையில் முடிவை தெரிந்து கொள்ள தவிப்பதாகட்டும், விளையாடுவதிலும், ரசிப்பதிலும் பால்பேதம் இல்லை என்பதை உணரலாம்.




அதிலும், காவலர் ஒருவர், 'என்ன ஆச்சு ஈரானிய பெண்களுக்கு, இதென்ன வாழ்வா, சாவா போராட்டமா, வீட்டில இருந்து பார்க்க வேண்டியது தானே?', என்ற கேள்வியிலிருந்து, அக்கறையோ என்றும் எண்ணும் வகையில் தொடரும் கேள்விகளுக்கு இந்தப் பெண்கள் கொடுக்கும் பதில்கள் எல்லாமே அட்டகாசமாக இருக்கும். முடிவில், விறுவிறுப்பான கால்பந்து போட்டியை, அந்தப் பெண்களைப் போலவே நாமும் கண்டு முடித்த திருப்தி எழுகிறது.

தமிழில் கில்லி படத்தை, தெலுங்கு ஒக்கடு வில் இருந்து ரீமேக் செய்திருந்தாலும், அந்தப் படத்தின் இயக்குனர் குணசேகர் கூட, 'பெண்ட் இட் லைக் பெக்காம்' ( Bend it like Beckham) என்ற ஆங்கிலப்படத்தின் மையக்கருவை எடுத்தே இயக்கி இருக்கக் கூடும். அந்தப்படத்தில், இந்தியாவில் இருந்து இங்கிலாந்தில் குடிபெயர்ந்த ஒரு குடும்பத்திலுள்ள பெண் கால்பந்து விளையாட, எப்படி எல்லாம் போராடி வெற்றி  பெறுகிறாள் என்பதே கதை.

நல்ல வேளை, விளையாடுவதற்கு நமக்கெல்லாம் இந்த மாதிரி பிரச்சனை இல்லை என்று தோன்றினாலும், அப்பொழுதே விளையாட மறுக்கப்பட்ட சில மாணவிகள் முகங்கள் பரிதாபமாக வந்து போகின்றன. ஹ்ம்ம்...
இப்பொழுதும் ஒரு ஹாக்கி மட்டையைப் பார்த்த மாத்திரத்தில், மின்னும் உற்சாகம், ஆடிய அத்தனை தருணங்களையும் வரிசைப்படுத்தும். ஒரே குழுவாக, சகலத்தையும் மறந்து விளையாடின நாட்கள், கடந்த காலத்தில் கூடுதல் வண்ணத்தை சேர்த்திருந்தன.

எட்டாவது வகுப்பில் பள்ளி முடிந்து, குரூப் ஸ்டடி என்று கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து படிக்கின்ற தொல்லை இல்லாமல், விளையாட்டு மைதானத்திற்கு ஹாக்கி ஸ்டிக் எடுத்து சென்று, ஒரு மணி நேரம் வரை விளையாடி விட்டு செல்வது தினசரி வழக்கமாக இருந்தது. தினமும் பயிற்சியாளர் வந்து, நிறைய குறிப்புகள் கொடுக்க, தொடரும் எங்கள் பயிற்சி நாள்தோறும். தொடர்ந்து இரண்டு முறை மாவட்ட அளவில் தோற்றாலும், பத்தாவது படிக்கையில், இறுதிப்போட்டியில் டிரா ஆன பிறகு, tie break இல், ஒரு கோல் அடித்து, முதன் முறையாக பள்ளிக்கு பெற்று தந்த கோப்பையில் திருப்தி ஆனது எங்கள் மூன்று வருடக் கனவு. அதற்கடுத்த இரண்டு வருடங்களுமே, தொடர்ந்து மாவட்ட சாம்பியன்களாக வலம் வந்தாலும், பள்ளிப்படிப்பை முடிக்கும் நேரத்தில், இங்கு இவ்விளையாட்டு எந்த கல்லூரியிலும் இல்லாததால், விசில் ஊதாமலே முற்று பெற்று விட்டது ஹாக்கி அத்தியாயம்.

பெரிய மைதானத்தின் ஒரு முனையில் இருந்து அதனடுத்த முனைக்கு ஒரே அடியில் பந்தை கடத்தும் திறன் பெற்ற மாணவிகள் பலர் இருந்தனர். ஆட்டத்தின் பொழுது விழிப்புணர்வோடு இருப்பது, வருகிற பந்தை தடுத்து எடுத்து அடிப்பது, சரியான படி எங்களுக்குள் பாஸ் செய்வது, முடிந்த அளவு காலில் வாங்காமல் ஆடுவது, 'D' உள்ளே செல்கையில் பரபரப்புடன் கோல் ஆக்க முனைவது என்று எல்லா நொடிகளிலும், சுறுசுறுப்புடன் விளையாடுவோம். அநேகமாக விளையாடிய அத்தனை பேருக்கும் மைதானத்தில் கீழே விழுந்த, அடிபட்ட தழும்பு இருக்கும்.

இன்றும் வருத்தப்படும் வைக்கும் ஒரு நிகழ்வும் வந்து இம்சிக்கிறது, ஒரு போட்டியில் எங்கள் அணி மாணவிக்கு பல் உடைந்து இரத்தம் வந்ததும் கிடைத்த இடைவேளையில், கூடி, பந்தை எடுக்க முயற்சிக்கும் சாக்கில், கிடைக்கின்ற எதிர் அணியினரின் காலில் ஒரு போடு போடுவது என்று எங்களின் மோசமான திட்டத்தை சிலர் செயல் படுத்த, அம்பயரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டோம். ஹ்ம்ம்.....  :(

முடிவை அறிய அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல், விளையாடும் நேரம் முழுக்க, அதனுள் நம்மை எடுத்துக்கொண்டு, பதிலாக ஆரோக்கியத்தையும், உற்சாகத்தையும் கொடுக்கும் என்பதால் கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகள் என்றென்றும் எனது விருப்பதிற்குரிய விளையாட்டுகள்!
















திங்கள், 15 ஜூலை, 2013

தந்தி


எதிர் பார்த்துக்கொண்டிருக்கின்ற அல்லது எதிர் பாராத அதி முக்கியத்தகவலை, வெகு விரைவில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டதே தந்தி.
தினமும், இதே ரீதியில் செய்திகளை தரவேண்டும் என்ற நோக்கத்தில் தான் தினத்தந்தி நாளிதழுக்கு இந்த பெயர் வைத்திருப்பர் என்றே எண்ணுகிறேன்.

சிறிய வயதில் ரயில் பயணங்களின் பொழுது ஓரத்தில் தொடர்ந்து காணப்படும்   தூண்களை பற்றி தாத்தாவிடம் கேட்ட பொழுது, இதன் வழியே தான் தந்தி அனுப்புவர் என்ற தகவலைப் பெற்றேன்.
" இதில போய்  எப்படி தாத்தா அனுப்ப முடியும்?", என்ற கேள்வியை,
நல்ல வேளையாக அந்த கம்பி கையில் சிக்காததால் பிய்த்து போடாமல் கேட்டேன்...... :P

அப்பொழுது பெற்ற தகவல் தான், ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு வகையான குறியீடு இருக்கும். வரிசையாக அனுப்பப்படுவதை இன்னொரு முனையில் பெற்று சேர வேண்டிய இடத்திற்கு உடனடியாக  அனுப்புவர் என்று.

வார்த்தைகளை சுருக்கி எழுதும் SMS க்கு, வாக்கியங்களை சுருக்கி எழுத கற்று தந்த தந்தியே முன்னோடி!

நிர்ணயிக்கப்பட அளவிற்கு மேல் கூடுதலாக அடிக்கும் வார்த்தைகள் அதன் அளவைப் பொறுத்தே , SMS மொத்தக் கணக்கில் இருந்து கழிக்கப்படும். தந்தி கூட அப்படி தான், கூடுதல் எழுத்துக்களுக்கு, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அன்றும், இன்றும், தொலை தொடர்பு வசதிகள்,  நம் பையிலிருந்து பணத்தை தேவைக்கு எடுத்தாலும், சிக்கனமாகவும் இருந்து பிழைப்பதற்கு கற்றுக் கொடுக்கின்றனவோ என்னவோ!




எட்டாவது வகுப்பு படிக்கும் பொழுது, ஆங்கிலத்தில் ஐந்து மதிப்பெண்கள் உள்ள வினாவாக தந்தி அடிப்பது எப்படி என்ற ஒரு கேள்வி.... ஒரு சூழ்நிலையைக் கொடுத்து, இந்த நேரத்தில் எப்படி தந்தி இருக்க வேண்டும் என்று இருக்கும்.
எழுதியதில் தற்பொழுது நினைவில் இருப்பவை.
பெண்/ஆண் குழந்தை பிறந்து விட்டது.
தாய் சேய் நலம்.
அவசரம். கிளம்பி உடனே வரவும்.
வாழ்த்துகள்!

சில வார்த்தைகளை மனப்பாடம் செய்து கொண்டாலே போதும், எளிதில் இதில் மதிப்பெண் பெற்று விடலாம். எழுதுவதற்கு சோம்பேறியான என்னை போன்றோருக்கு மிகக் குறைவான எழுத்துக்களில், உரிய மதிப்பெண் பெறக் கூடிய பகுதி. அதுவும், புரிந்தால் போதும் இலக்கணம் மிக சரியாக பின்பற்றப்பட தேவையில்லை என்பதாலேயே இன்னும் எளிமையான, விருப்பத்திற்குரிய பகுதி. ஆனாலும், கற்றுக் கொண்டதைப் பயன்படுத்தி என் வாழ்க்கையில் இது வரை ஒரு தந்தியும் அடித்ததும் இல்லை, பெற்றதுமில்லை என்பது சோகமே. 

இனி தந்தியை கண்டுபிடித்த சாமுவேல் மோர்ஸ் பற்றி, போட்டித் தேர்வுகளில் கேள்வி எழுப்பி பதில் பெறும் முறையில் ஞாபகப்படுத்திக் கொள்வதைக் கூட மறந்து  விடுவோம் என்றே நினைக்கிறேன்.

ஒவ்வொரு அடியாக முன்னேற முன் தள்ளியவை, தேவையில்லை என்று காணாமல் மறைந்து போனாலும், இப்பொழுது வந்தடைந்திருக்கும் இடத்திற்கு அவையும் காரணம் என்பதை மறுக்க முடியாது!







வியாழன், 4 ஜூலை, 2013

DDLJ

இன்று காலையில் பார்த்தப் படங்களில் பிடித்தவற்றை தேர்வு செய்து  பேஸ்புக்கில் சேர்த்துக் கொண்டே வந்த பொழுது வந்து நின்றது....
தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே...

தியேட்டருக்கு சென்று மூன்று முறை பார்க்க வைத்த ஒரே படம். முதல் மூன்று காரணம்.....
1. ஷாரூக்
2. ஷாரூக்
3. ஷாரூக்
தூர்தர்ஷனில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த பொழுதே அதிக துறுதுறுப்பின் காரணமாகவே வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும் இவரை. அதே இயல்பில் கலக்கி இருக்கும் ஷாரூக்கின் குறும்பு, கிண்டல் பார்வை, சேட்டைகள் மிகுந்து மீண்டும் மீண்டும் ரசிக்கும்படியாக இருக்கும் இந்தப் படத்தில். அதே நேரத்தில், காதல் என்று வரும் பொழுது ( பாருங்க, யார்னாலும், இங்க மட்டும் ஒரே மாதிரி இருக்காங்க :P)  உருகும் இடங்களிலும், முழுதாக தன்னை அர்பணித்துக் கொள்ளும் இடத்திலும் நம்மையும் ரசிக்க வைத்து பார்க்க செய்வதே இவரின் சிறப்பு.

அடுத்து, இசை.... இன்றும் பலமுறை சலிப்படையாமல் கேட்க செய்யும் பாடல்கள் நிறைந்த படம்.


ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எல்லாம் நல்லா இல்லாமலா படம் ஓடி இருக்கும். ஹிஹி ,அவங்க பேரெல்லாம் மறந்து போயிடுச்சு.
அது சரி, தெரிஞ்சவங்களை தான் திட்டி விமர்சனம் பண்றோம். இதை படிக்கவே போகாத படத்தில சம்பந்தப்பட்டவங்களைப் பத்தி, நாலு வார்த்தை நல்லா தான் எழுதுவோமே :)  

கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம். எது எப்படி என்றாலும், மாதத்திற்கு இரண்டு படங்கள் பார்ப்பது அப்பொழுதைய விருப்பத்திற்குரிய பொழுது போக்கில் ஒன்று. அந்த வகையில், ஒரு சனிக்கிழமையில் மதுரை, ராம் விக்டோரியா தியேட்டரில், உடன் படித்த ஒரு மாணவி கூட மிஸ் ஆகாமல் கவனித்த, மன்னிக்கவும், பார்த்த ஒரே படம் இது. :)

கதை என்று பார்த்தால், ஏற்கனவே  திருமணம் நிச்சயிக்கப்பட்டப் பெண், வேறொரு ஆணை திருமணம் செய்வது தான். இதற்கு பிறகு வந்த பர்தேஷ்
  படத்தில் அண்ணியாய் வரப்போகிற பெண்ணை, காதலித்து திருமணம் செய்வார். வரிசையாக, இது போன்ற பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொண்ட இயக்குனர்களின் தேர்வு ஷாரூக் ஆக இருக்கலாம் என தோன்றுகிறது. (இதேஆரம்பத்தின், பல் வேறு அபாய முனைகளையும் தொடுவதோடு உள்ளே புகுந்து சாதனை செய்த தமிழ் இயக்குனர்கள் சிலர் இருக்கின்றனர், அது தனிக் கதை)

இதற்கு முன்பாக வந்து சக்கை போடு போட்ட, 'ஹம் ஆப்கே ஹைன் கௌன்', திரைப்படம் மாதிரி, பாதி நேரங்களில் திரை முழுவதும் குடும்ப உறுப்பினர்கள், வேலை வெட்டி இல்லாமல் ஏதாவது பண்டிகையைக் கொண்டாடுவதும், அடிக்கடி சிரித்துக்கொண்டே இருப்பதும், எதையாவது தின்று கொண்டே இருப்பதுமாக, படம் போகும். அதே ரீதியிலான, சில வழக்கமான காட்சிகள் இதிலும் உண்டு.

கல்லூரியில் பட்டம் பெறும் விழாவில் தேர்வில் தோல்வியடைந்த ஷாரூக் கலந்து கொள்வது, கஜோல், ஷாரூக் முதன்முதலில் பேசிகொள்வது போன்ற காட்சிகள் அப்போவே, இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்று தோன்றியது உண்டு.

தொடர்ந்து அவர்கள் ஊர் சுற்றி பார்க்கும் பொழுது நடக்கிற சின்ன சின்ன சம்பாஷனைகள், நிகழ்கிற சம்பவங்கள் ஆர்வத்தோடு அவர்களுடன் நம்மையும் பயணிக்க வைக்கும். எந்த இடத்திலும் நடிக்கின்றனரோ என கொஞ்சமும் யோசிக்க முடியாத அளவு கஜோலின் நடிப்பும் அட்டகாசமாக இருக்கும். இந்தியாவிற்கு கஜோலை தேடி வந்து, அவர்கள் வீட்டில் இருந்து கொண்டே நகரும் காட்சிகள் இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்தவை போல இருந்தாலும், எப்படியாவது, இவர்கள் இணைய வேண்டும் என்ற ஆர்வம் மொழி தெரியாதவர்களுக்கும் அதிகரிக்கும். மிகப் பெரிய பட்ஜெட் படத்தில், இறுதி காட்சியில், நான்கில் ஒரு சினிமாவில் வருவது போலவே , ரயில்வே ஸ்டேஷனில் எடுக்கப்பட்டிருப்பதை தவிர்த்து ஏர்போர்ட்டில் வைத்திருக்கலாம். :P

17 வருடங்களுக்குப் பிறகும், லதா மங்கேஸ்கர் - குமார் சானு வின், குரலில், 'துஜே, தேக்கா, தோ யே ஜானா சனம், .........', கேட்கும் பொழுது முதல் முறை ஏற்படுத்திய அதே சிலிர்ப்பு இப்பொழுதும் கூட. மனசெல்லாம் மகிழ்ச்சிப் பூக்கள் கூட்டம் கூட்டமாக, நொடியில் மலர்வதைப் போல இருக்கிறது. :)
( இன்று எத்தனை முறை இந்தப் பாட்டை தொடர்ந்து கேட்க போகிறேன் என்று தெரியவில்லை )

பிடித்தவர்களால் நடிக்கப்பட்ட கதாப்பாத்திரங்கள், இப்படி எல்லாம் நடக்குமா என்ற ஆர்வமும், நடந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கமுமே இந்தப் படத்தின் வெற்றி என நினைக்கிறேன்.













புதன், 3 ஜூலை, 2013

ஆறு சிக்னல்கள் - இருபது நிமிடங்கள்!

இரத்தக் கொதிப்பிற்காக ராம் எடுத்துக் கொள்ளும் சிகிச்சையை அக்குபஞ்சர்க்கு மாற்றி சில வாரங்கள் ஆகிறது. கோமதிபுரம் கடைசியில் இருக்கும் மருத்துவர் வாரத்தின் மூன்று நாட்கள் மட்டுமே சிகிச்சை அளிப்பார். மாலை வேளையில் அதிக பட்சம் ஆறரை  மணி வரையே இருப்பார். விடுப்பு, சிறப்பு அனுமதி எடுத்து என சில வாரங்கள் சிகிச்சைப் பெற்ற நிலையில், அக்குபஞ்சர் சிகிச்சையின் பக்க விளைவாக கடும் காய்ச்சலுடன் கல்லூரிக்கு சென்றிருந்த தன்னை, நேற்று மாலை ஆறு மணிக்கு பாத்திமா கல்லூரி அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அழைத்து சென்றால், மருத்துவரை உறுதியாக பார்த்து விடலாம் என்று மொபைலில் சொன்னதும், சாதாரண நாளிலே அரை மணி நேரம் கடக்க எடுத்துக் கொள்ளும் தூரத்தை, இருபது நிமிடங்களில் கடந்தே ஆக வேண்டும், அதுவும் இந்த கடுமையான போக்குவரத்து இருக்கும் நேரத்தில் என்று எண்ணிக்கொண்டே இரு சக்கர வாகனத்தை எடுத்தேன்.

காத்துக் கொண்டிருந்த இரண்டாவது நிமிடத்திலே வந்து நின்ற கல்லூரி பேருந்தை ' சவால் ஆரம்பமாகிவிட்டது', என்று ஆர்வத்துடன் பார்த்தால், வேறு யாரோ இரண்டு பேர் இறங்கி செல்ல மெதுவாக புறப்பட்ட வண்டியின், கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த இன்னொரு பேராசிரியர்,
'சார், அடுத்த பஸ்ஸில வர்றார் மேடம் ', என்ற தகவலை வேகவேகமாக சொன்னவுடன்,
'பஸ் ல ஏன் வர்றார்?', என்று பதில் கேள்வியில் குழம்பிய அவரின் முகத்தை பார்த்த திருப்தியில், தொடர்ந்து காத்துக் கொண்டு இருந்தேன். அதற்குள், அவர் செல்லில் கூப்பிட்டு, தகவலை சொல்லி இருக்கிறார் என்று அடுத்த பஸ் வந்து சேர்ந்ததும் தெரிந்தது. எப்பவும் போல, 'நீ திருந்தவே மாட்ட', என்று விளையாட்டாய் கடிந்து கொண்ட ராமை, பின்னால், அமர செய்து கிளப்பினேன் வண்டியை.

மொத்தம் ஆறு சிக்னல்கள், அதிகமான எண்ணிக்கையில், அவதி அவதியாக விரையும் வாகனங்கள். மழை பருவத்தில் பொழிய தப்பினாலும், தவறாமல் மண்ணை அள்ளி வீசும் காற்று காலத்தில், பயணிப்பது பெரிய சவால் தான்.

'தொடர்ந்து பல வண்டிகளும் அடுத்தடுத்து ஓவர் டேக் செய்து முந்துவதால் ஏற்படுவதே டிராபிக் ஜாம்'. (அடடா, ஒரு ஸ்டேடஸ் தேறிடுச்சே என்று உள்ளே ஓடிக்கொண்டிருந்தது) சில இடங்களில் முந்தி, சில இடங்களில் பின் தங்கி, பாலத்தில் ஏறி இறங்கி, சிக்னலைக் கடந்த வண்டியை கோரிப்பாளையத்தில் வரவேற்றது சிவப்பு சிக்னல். கிங் மெட்ரோ ஹோட்டல் பக்கத்திலிருந்த வண்டிகள் செல்ல ஆரம்பித்திருந்தன. அடுத்து மற்றொரு பக்கத்திலும் வாகனங்கள் புறப்பட ஆரம்பித்து, அவற்றின் எண்ணிக்கை ஒன்றிரண்டு என குறையும் நேரத்தில், வண்டியை ஸ்டார்ட் செய்தால் போதுமானது என்று அமர்த்தி வைத்தேன்.



ஒரு வழியாக பச்சை விளக்கு ஒளிர்ந்த நொடியில் வண்டியை ராஜாஜி மருத்துவமனை உள்ள சாலையில் விட்டால், மதுரையில் உள்ள அத்தனை வண்டிகளும் ஒரே நேரத்தில் வெளியே வந்து ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு செல்வது போன்ற பிரம்மை. இங்கு, 20-30 கி.மீ. வேகத்தில், செல்வதே பெரிய வித்தை புரிவது போன்று. இந்த நேரத்தில், இந்த சாலையில் ஓவர் டேக் செய்வதும், தற்கொலைக்கு முயற்சிப்பதும் வேறு வேறு இல்லை. சீரான வேகத்தில் சென்று கொண்டே இருந்தாலும், அவ்வப்பொழுது மணியைப் பார்த்துக்கொண்டே சென்றேன்.

நல்ல வேளையாக, ஆவின் பால்பண்ணை அருகில் சிக்னலைக் கடக்கையில் மஞ்சள் விளக்கு ஒளிர்ந்தது. ஓரளவு அகலமான, சீரான சாலையில் சில நிமிடங்கள் பயணிக்க, மேலமடை அருகில் உள்ள சிக்னல், வழக்கம் போல சில நிமிடங்களைத் தின்று தீர்த்து விட்டே வழி விட்டது. அதிலும், சிவகங்கை சாலையில் உள்ள கோமதிபுரத்திற்கு செல்லும் இந்த நேரங்களில், எதிரில் பயணிப்பவர்கள், பொதுவாக வீடு திரும்பிக் கொண்டிருக்கும் பல முகங்களை நிதானமாக பார்த்துக்கொண்டே, சிறிது சிறிதாக நகர முடியும். (ஒன்றிரண்டைத் தவிர, அனைத்து முகங்களும் சோர்ந்து, வாடி இருப்பது போல பட்டது)

அங்கங்கே தட்டுப்படும் சிறிய பள்ளங்கள், ஓரங்களில் சரிந்து சாலையில் விழுந்து கிடக்கும் மண், குறுகலான வழி,  இவற்றை கடந்து சென்றால்   பல மீட்டர் தூரத்திற்கு பிறகே அகலமாகும்  சாலை. சில நிமிடங்களிலே ஊர்ந்து செல்லும் வேகத்தை சற்று அதிகப்படுத்தும் வண்ணம், முன்னே உள்ளே வண்டி சென்றது. இதில் முன்னே செல்லும் வண்டியை, அப்படியே பின்பற்றினால், நாமும் அதே வகையான வண்டியில் பயணிக்க வேண்டும். ஒரு வேளை, அந்த வண்டி நான்கு சக்கரமாக இருந்தால், அது பள்ளத்தில் தப்பிக்க சற்று ஓதுங்கி பாதுகாப்பாக செல்லும் பொழுது, நிச்சயம் அந்த பள்ளத்தில் நம் இரு சக்கர வாகனம் இறங்கி ஏறும். (அடடா, இரண்டாவது ஸ்டேடஸ் தேறிடுச்சே :P )

அதிலும், இந்த சின்ன சின்ன பள்ளங்களை எல்லாம் கவனித்து சுற்றி வளைத்து வர முடிகின்ற பலரும், பெரிய திறமைசாலிகள் என்று அகம்பாவம் கொண்டு விடக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில், அங்கங்கே இருக்கின்ற பெரிய பள்ளங்கள், தங்களுக்குள் இறங்க வைத்து அவர்களின் பெருமையை வாங்கிய பின்னரே வெளியே விடும்.

இப்படியாக.....
வேகமாகவும், பாதுகாப்பாகவும், பயணித்து.......
சரியாக, இருபதாவது நிமிடத்தில் இலக்கான, கோமதிபுரம் ஒன்பதாவது தெருவில் வளைத்து, மருத்துவமனைக்கு முன் வண்டியை நிறுத்தி விட்டு,  உள்ளே இருந்த மருத்துவரை பார்த்து விட்டு,
வெளியே வந்து வெற்றி புன்னகையுடன் பார்த்தால், கரவொலி எழுப்பவோ, விருது வழங்கவோ யாருமில்லை!  :P