செவ்வாய், 17 செப்டம்பர், 2013

பாவம்!



காலாண்டுத் தேர்வில் இன்று சமூக அறிவியல் தேர்வை எழுதி முடித்துக் காத்துக் கொண்டிருந்த வருணை பள்ளியில் அழைக்க செல்கையில் மணி 12.
' எப்பட்றா எழுதின?'
' சூப்பர்... பர்ஸ்ட்டா எழுதிக் கொடுத்திட்டேன்ல'.


' சரி,  அந்த டயக்ராம் வரைய சொல்லிக் கேட்டு இருந்ததா?' என காலையில் மீண்டும் மீண்டும் வரைய வைத்த பாடப்பகுதியைக் கேட்டேன்.
'ஆமாமா, லாஸ்ட் ல கேட்டு இருந்தாங்க... அந்த ஃடிராபிக் சிக்னல் ஐ வரஞ்சேன், பர்ஸ்ட்டா கொடுக்கணும்னு, பக்கத்தில எது, எதுக்காகன்னு எழுதாம கொடுத்திட்டேன் மா', என்கிறான் சர்வ சாதாரணமாக.

வந்த ஆத்திரத்தை கட்டுப்படுத்திக் கொண்டு,
' சரி, காலைல கூட சொன்னேனே, வரிசையா வரஞ்ச மூணு வட்டத்தில, மேல, ஆரஞ்சு கலர் அடிக்க கூடாது, சிவப்பு கலர் தான் அடிக்கணும்னு, சரியாதானே அடிச்சே...'
' கலர் பென்சில் இல்லம்மா, அதுனால அடிக்கல'.
'காலைல பேக் ல வச்சுவிட்டேனே' என்று அவன் பையை சோதிக்க முற்படுகையில்...
' நான் எக்ஸாம் ஹால்க்கு உள்ளே எடுத்திட்டு போக மறந்திட்டேன் ம்மா'  என்றான் பாவமாக........

நடந்து செல்லும் வழியிலேயே ஒரே ஒரு அடியாவது அவன் முதுகில் பொறுக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு... மூன்றாவது படிக்கிறான், நாளுக்கு நாள் போட்டிகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சமூகத்தில் எதற்கும் கவலை இல்லாமல் இருக்கிறானே என்று உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டே நடந்தேன்.

' ம்மா, இந்த பேர்ட் புதுசா இருக்கு, இது பேரு என்ன?'
அவன் கை காட்டிய திசையில் ஒரு மைனா அமர்ந்திருந்தது.
' மைனா' என்றேன்.
' மைனா, மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுது ன்னு ஒரு பாட்டு வருமே, அந்த மைனாவா? ......... என்ற கேள்வியை கேட்ட உடன்,
' இதெல்லாம் நல்லா கேளு ... இந்த பறவையோட பேர் வச்சு இருந்த ஒரு அக்கா அவங்க ... இது வெறும் பறவை......',  என்று வேகமாக நடக்க தொடங்கினேன்.

' ம்மா... '
'இன்னும் என்னடா...'
'வீட்டுக்கு யாரு பர்ஸ்ட்டா போவோம்னு பாப்போமா? ' என்றவனிடம்.....
மீண்டும் உச்சத்தில் ஏறத் துவங்கியிருந்த எரிச்சலில்.......
' பாவம்.......' என்று வாய் அழுத்தமாக சொன்னது.
' யாரும்மா பாவம்? என்று ஆவலுடன் விசாரித்த வருணிடம்
' நாந்தான் .........................' என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னேன்.


திங்கள், 2 செப்டம்பர், 2013

ஜி. நாகராஜன் - அபூர்வ எழுத்தாளர்!

மிக சமீபத்தில் காலச்சுவடு வெளியீடான, ஜி.நாகராஜன் ஆக்கங்களை தொடர்ச்சியாக வாசித்தேன். 'நாளை மற்றுமொரு நாளே', என்ற நாவலை வாசிக்க, வாசிக்க, இதென்ன இப்படி எழுதி இருக்கிறார் என்று சங்கடம் சிறிது நேரம் தொடர்ந்தது. வாசித்து முடித்ததும், நம்மிடையே வாழும் அதே நேரத்தில் நாம் பார்க்கப் பிரியப்படாத மனிதர்களைப் பற்றிய கதைக் களத்தில், கதாப்பாத்திரங்கள் அவற்றின் இயல்பில் வாழ்ந்திருப்பதை அறிய முடிந்தது.

அதே வேகத்தில் 'குறத்தி முடுக்கு', வாசித்தேன். ஐம்பது வருடங்களுக்கு முன்பே பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையை அவர்களின் கோணத்தில் எழுதிய நேர்மையுடன் கூடிய ஜி. என், னின் துணிச்சலை அதில் பார்க்கலாம்.

                     
ஆரம்பத்தில் வாசிப்பதற்கு நெருடலாக இருந்த எழுத்துகள், தயங்கி தயங்கி பக்கங்களைப் புரட்ட செய்த வரிகள், போலித்தனமற்ற, அறைகிற உண்மையை உணர, உணர, அது வரை இருந்த அத்தனை தயக்கங்களையும் வரிசையாக உடைக்கிறார் ஜி.என். ஒரு கட்டத்தில் அவருடன் கைகுலுக்கி சௌகர்யமாக பயணிக்க முடிகிறது.

ஜனசக்தி, தாமரை, ஞானரதம், கண்ணதாசன், கணையாழி, போன்ற பல சிற்றிதழ்களில் வெளியான ஜி. நாகராஜனின் சிறுகதைகள் பெரும்பாலும், அதிகார வர்க்கத்தின் கோர முகத்தையும், நாம் பொது வெளியில் பேச தயங்கும் நபர்களின் வாழ்க்கையையும், எளிய மனிதர்களின் இயல்புகளையும் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகின்றன.

'வெகுமதி' என்ற சிறுகதையில், செய்யாத தவறுக்காக, இன்னும் சொன்னால், பேருதவி செய்த கந்தன் என்ற வேலைக்காரனுக்கு வெகுமதியாக அளிக்கப்படும் சிறைவாசம், அந்த துறையில் பணிபுரிகிறவர்கள் அல்லது அவர்களின் வீட்டார்களோ ஒன்றிப் போய் படிக்க நேர்ந்தால், நிச்சயம் சில நிமிட குற்ற உணர்வுக்கு ஆள் ஆவார்கள்.
விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய திரைப்படங்கள் கொண்டாடப்பட்டு வரும் இந்த நாட்களில், இன்றும் எழுதத் தயங்கும் பல விஷயங்களை, 50, 60 ஆண்டுகளுக்கு முன்பாகவே போகிற போக்கில், அழுத்தந்திருத்தமாக தம் கதைகளின் வாயிலாக பதிய வைத்தவர் ஜி. என்.

ஒரு இடத்தில் ஜி. நாகராஜன் சொல்கிறார், " நாட்டில் நடப்பதைச் சொல்லி இருக்கிறேன். இதில் உங்களுக்கு பிடிக்காதது இருந்தால், "இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது?" என்று வேண்டுமானால் கேளுங்கள்; "இதையெல்லாம் ஏன் எழுதவேண்டும்?" என்று கேட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும்".

சுந்தர ராமசாமி க்கு, அவர் எழுதிய கடிதத்தில், "நீங்கள் குறிப்பிட்டுள்ள பதிப்பகங்கள் எல்லாம் துடைப்பத்தால் கூட என் எழுத்துகளை தீண்டாதவை" என்கிறார்.
இதிலிருந்தே தெரிகிறது, அவர் வீட்டிலும் எத்தகையப் புறக்கணிப்பு நிகழ்ந்திருக்கும் என்று. அவரின் மரணத்தின் பொழுது வெறும் ஐந்து பேர் மட்டும் உடன் இருந்ததை, அவரின் நண்பர் கர்ணன் சொல்லக் கேட்ட பொழுது, மாமனிதர்களின் மறைவிற்கு விரல் விடும் எண்ணிக்கையில் தான் கூட்டம் இருக்கும் என்று தோன்றியது. அதுவும், அவரின் மகனைக் கூட இறுதி சடங்கிற்கு அவரது மனைவி அனுப்பவில்லை என்று கேள்விப்பட்டதும், அந்த குடும்பத்தின் இடத்தில் இருந்து பார்த்தால், அவர்களும் பாவம் என்றே தோன்றுகிறது.

அவருக்குப் பின் இத்தகைய துணிச்சலான எழுத்தாளர்கள் நடந்து செல்வதற்கு மாதிரி சாலையை அமைத்து தந்தவர் ஜி.என்.
மனம், வாக்கு, சொல், செயல் அத்தனையும் ஒன்றாகவே இருக்கும் அபூர்வப் பிறவிகளில் ஒருவர்.

ஆங்கிலத்திலும் நாவல், சிறுகதைகள் எழுதிய, கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றிய ஜி, என், எந்த சமரசமும் எவருடனும் செய்து கொள்ளாமல், அவர் மனது சரி என்று சொல்வதை மட்டுமே கடைசி வரை செய்து, தன் ராஜாங்கத்தில் ராஜாவாகவே வாழ்ந்தார். இறுதிக் காலத்தில், பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டவர்.

கடைசி நாட்களில், மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் குளிர்கிறது என்று அவர் சொன்னதும், போர்வைகளை போர்த்தியவர்களிடம், ' இந்தக் குளிர் சிதைக்குள் வெந்தால் தான் அடங்கும்', என்றாராம்.
எங்கள் மதுரை மண்ணில், பிறந்து, வாழ்ந்து உரிய அங்கீகாரத்தைப் பெறாமலே, இன்னும் சொன்னால், அது பற்றிய துளிக் கவலையும் இன்றியே மறைந்தாலும், இன்று அவரது குடும்பம், அவரின் பெருமைகளை உணர்கிறது, இதன் வாயிலாக நாம் அறிவது என்று சொல்லி எதையும் எழுதுவதை ஜி. நாகராஜன் விரும்பமாட்டார் என்பதால், முற்றிபுள்ளி வைத்துக் கொள்கிறேன்.